மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவருடன் முதல் வைத்து எண்ணத்தக்க இன்னொருவர். இவர் 9ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். வாதவூர் என்னுமூரில் ஆமத்திய பிராமணர் குலத்தில் தந்தையார் சம்புபாதாசிரியரிற்கும் தாயார் சிவஞானவதியாரிற்கும் மகனாகப் பிறந்தவர், வாதவூரடிகள் அல்லது வாதவூரர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தன்னுடைய கல்வி அறிவினாலும் திறமையாலும், வரகுண பாண்டியனின் அமைச்சரானார்.
ஒருமுறை குதிரை வாங்குவதற்காக இவரைப் பாண்டியன் திருப்பெருந் துறைக்கு அனுப்பினான். நிறைந்த பொருளையும் கொண்டு அங்கே சென்ற அவர், ஒரு சிவனடியாரைச் சந்தித்ததில் தான் வந்த வேலை மறந்தார். கொண்டுவந்த பொருளனைத்தையும் சிவத் தொண்டுகளில் செலவு செய்தார். வெறுங்கையுடன் திரும்பிச் செல்லப் பயந்த அவர் இறைவனிடம் முறையிட்டாராம். இறைவனுடைய விருப்பப்படி குதிரைகள் பின்னொரு நாளில் வந்து சேரும் என்று சொல்ல, இறைவன் நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டுவந்து அரசரிடம் கையளித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனினும், அடுத்த இரவிலேயே குதிரைகள் மீண்டும் நரிகள் ஆயினவாம். சினம் கொண்ட அரசன் மாணிக்கவாசகரை அழைத்து அவருக்குக் கடும் தண்டனைகளை வழங்கினான்.
இறைவன் அருளால் எல்லாத் தண்டனைகளையும் மாணிக்கவாசகர் தாங்கிக்கொண்டதைக் கண்ட அரசன் அவரை விடுதலை செய்தான். அவர் திருப்பெருந்துறைக்குச் சென்று அங்கு சில காலம் தங்கியிருந்துவிட்டுப் பின்னர் தல யாத்திரையில் ஈடுபட்டார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனிமகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது
All credits goes Mr.Sureshbabu, Aanithirumanchana vilaa kuzhu.
ReplyDelete