Thursday, April 20, 2017

அம்பலக் கூத்தனுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்:

தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.
ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்: ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
"சித்திரை ஓணமும் சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் - பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்''
01. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் தேவர்களின் அதிகாலை பூஜை (தனுர் மாத பூஜை)சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்.
02. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் காலை சந்தி பூஜை அபிஷேகம் மட்டும்.
03. சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் தேவர்களின் உச்சிக்கால பூஜை அபிஷேகம் மட்டும்.
04. ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் தேவர்களின் சாயங்கால பூஜை சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்.
05. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் இரண்டாம் கால பூஜை அபிஷேகம் மட்டும்.
06. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் அர்த்தஜாம பூஜை அபிஷேகம் மட்டும்.
அந்த வகையில் இன்று (20.04.2017) ஹேவிளம்பி ஆண்டு முதல் நடராஜர் அபிஷேகம் சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் காலை 10 மணிக்கு அம்பலக் கூத்தனுக்கு 16 வகை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது இதில் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல பொற்சபை நாயகன் திருவருள் பெறுவோம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...